திருகோணமலை கந்தசுவாமி வீதியில் உயிரிழந்த நிலையில் கொம்பு மான் மீட்பு

திருகோணமலை நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றான கந்தசுவாமி வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை கொம்பு மான் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதிக்குள் நடமாடும் வனவிலங்குகளில் ஒன்றான இந்த மான், உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர்.

குறித்த மான் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

திருகோணமலை நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் பாதுகாப்பு குறித்த அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிகளில் வேகமாகச் செல்லும் வாகன சாரதிகள், இவ்வாறான வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.