
திருகோணமலை ஊடகவியலாளரின் செய்தியின் விளைவு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லம்பத்தை கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அப்பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கல்லம்பத்தை மக்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள குடியமர்த்தப்பட்ட கல்லம்பத்தை கிராம மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் நீரில்லாமல் மிகவும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் இக்கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதியுற்று வருவதாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் இச்செய்தியை பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட நலன் புரிச்சங்கம் ஆறு குழாய் கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் குச்சவெளி நாவற்சோலை பகுதியிலுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாவட்ட நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ். குகதாசன் தெரிவித்தார்.
இக்குடிநீர் பிரச்சினைக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி முருகன் கோயில் நிர்வாகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


