திருகோணமலையில் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபர் கைது!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று புதன்கிழமை குறித்த சந்தேக நபரை கைது செய்ததாக  தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்மாந்தோட்டை- உதாகம்மான பகுதியில் வசித்து வரும் அந்தோணி பதுகே திலின பிரசாத் (34வயது) என  தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்திற்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை செய்த போது கடந்த இரண்டு வருடங்களாக திருகோணமலை பிரதேசத்திற்கு அம்மாந்தோட்டை- பிரதேசத்திலிருந்து ஹெரோயின் போதை பொருளை கொண்டு வருவதாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், புலன் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.