திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்-

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூக சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத் திறனாளி நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் இடம் பெற்றது.

இம் முறை தொனிப்பொருளாக “உள்ளடங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளின் கலை, கலைசார நிகழ்வுகளும் இதன் போது அவர்களது திறன்களை வெளிக்கொணர ஒரு களமாக அமைந்திருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து கொண்டதுடன் தனது உரையின்போது,

“உங்களால் முடியாது என்று எதுவும் இல்லை அனைத்தும் உங்களால் முடியும், இந்த தினத்தை கொண்டாடுவதும் உங்களது திறமைகளையும் இம் மேடையில் கண்டு கொள்வதுடன் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

கலை, கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் குருகுல சூரிய , மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன் உட்பட பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர் அபிவிருத்தி நிதிய உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.