திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியால் மீன்கள் தட்டுப்பாடு

-திருகோணமலை நிருபர்-

 

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம் வெளி மாவட்டங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக வருபவர்கள் டைனமைட், சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், நெத்தலி 1500 ரூபாய்க்கும், கனவாய் 1100 ரூபாய்க்கும், இறால் 1200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

அத்துடன் மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதினால் சில்லறை வியாபாரிகள் கிராமங்களுக்கு சென்று இன்னும் மேலதிக விலைக்கு விற்க வேண்டிள்ளதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.