திருகோணமலைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு இன்று சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் அகதிகள்  மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், வெள்ளிக்கிழமை இரவு தங்க வைக்கப்பட்டிருந்த 104 மியன்மார் அகதிகளும், இன்று காலை 7.30 மணிக்குப் பின்னர் பொலிஸாரினால் 2 பேருந்துகளில் மிரிஹானை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த பயணிகள் அடங்கிய பேருந்துகள் இடை நடுவே சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, பின்னர் மியன்மார் அகதிகள்  திருகோணமலைக்கு மீள அழைத்து வரப்பட்டனர்.

குறித்த மியன்மார் அகதிகளை மிரிஹானை முகாமில் தங்க வைப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காததன் காரணமாக, குறித்த நபர்கள் மீள திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,   அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் திங்கட்கிழமையளவில் குறித்த முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த மியன்மார் அகதிகளை, யு.என்.எச்.ஆர் பிரதிநிகள் பார்வையிட்டதுடன், அவர்களிடமிருந்து தகவல்களையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன், அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய தேவைகளை அரச திணைக்களங்களும், தொண்டர் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கிய படகிலிருந்து தீட்கப்பட்டு, திருகோணலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் அகதிகள், நேற்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, தமது நாட்டில் வாழ முடியாத காரணத்தால், தமது நிலபுலங்களை விற்று படகில் இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்ததாக,  தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான், சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற் பரப்புக்குள் உள்நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களை கூட்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனையோரை முகாமில் தங்கவைக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.