தாய்லாந்து யானைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகள் தொடர்பில் ஆராய கால்நடை வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ‘தாய் ராஜா’ மற்றும் ‘கந்துல ‘ ஆகிய இரண்டு யானைகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் கால்நடை வைத்தியர்கள் அடங்கிய குழுவை நியமிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய் ராஜா என்ற யானை தலதா மாளிகையின் யானைகள் கொட்டிலிலும், கந்துல என்ற யானை களனி ராஜ மகா விகாரையின் கீழும் உள்ளன.
இந்த இரண்டு யானைகளுக்கும் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாகக் கூறி தாய்லாந்து அரசாங்கம் அவற்றை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாய்லாந்து தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், அலுத்கம விகாரையில் இருந்த ‘முத்து ராஜா’ என்ற யானைக்கும் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதால் தாய்லாந்து அரசாங்கம் அதனை மீளப் பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த இரண்டு யானைகள் தொடர்பிலும் ஆராய இந்தக் கால்நடை வைத்தியக் குழு நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார் .
