தாயின் காதலனை அப்பா என அழைக்க மறுத்த குழந்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு!
ஹோமாகம-மாகம்மன பகுதியில், தாயின் காதலனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வயதும் நான்கு மாதங்களுமேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பரிந்தி திலான்யா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை தனது தாய், 11 வயதுடைய அண்ணன், அம்மம்மா மற்றும் அப்பப்பா ஆகியோருடன் வசித்து வந்துள்ளது.
குழந்தையின் தந்தை குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்ற நிலையில், தாய் வேறொரு நபருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.
குறித்த நபர் அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம், என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், தன்னை ‘அப்பா’ என அழைக்குமாறு குழந்தையை கட்டாயப்படுத்தியுள்ளார்.
எனினும், குழந்தை அவ்வாறு அழைக்க மறுத்ததால் அவர் பல சந்தர்ப்பங்களில் குழந்தையை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குழந்தையின் தாயும் சந்தேக நபரை ‘அப்பா’ என அழைக்குமாறு குழந்தையை வற்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி இரவு வீட்டிற்கு வந்த சந்தேகநபர், 13ஆம் திகதி அதிகாலை குழந்தையை மீண்டும் தாக்கியுள்ளார்.
பின்னர், புதிய வீடு பார்ப்பதாகக் கூறி அன்றைய தினம் காலை குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மாலை வேளையில் அவர் குழந்தையை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்தபோது, குழந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் கவனித்துள்ளனர்.
குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தாயோ அல்லது சந்தேகநபரோ முன்வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து, தான் பொலிஸில் முறையிடப் போவதாகக் கூறி அம்மம்மா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்போது, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாகனம் எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர், தாய் தனது சகோதரருடன் இணைந்து குழந்தையை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் (Base Hospital) அனுமதித்துள்ளார். எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தாய் ஏற்கனவே தனது குழந்தைக்கும் தனக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது காதலன் குழந்தையைத் தாக்குவது தாய்க்குத் தெரிந்தே நடந்ததா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரைப் பிடிக்க பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் மூத்த சகோதரன் மற்றும் அம்மம்மா, அப்பப்பா ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தாய் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
