
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் கற்பனைக் கதைகளை கூறினார் – சஜித் பிரேமதாச
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாடு சாபத்தை எதிர்கொண்டுள்ளதாகத் திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாகக் கூறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அரநாயக்க தேர்தல் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே எதிர்க்கட்சித்தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
76 வருட வரலாற்றில் நாடு சாபத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்து வரும் கருத்தானது தவறானது என தரவு ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் மின்சார கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கற்பனைக் கதைகளைக் கூறினார்.
தேவையற்ற வரிகள் காரணமாகவே எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்த பின்னர் பாரிய தொகை வித்தியாசத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் குறித்த எந்தவொரு விடயமும் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்கி மக்களுக்கு சாதகமான சூத்திரத்தைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்தனர்.
இதுவரை புதிய சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவில்லை.
ஏலவே காணப்பட்ட சூத்திரத்தையே இவர்களும் பின்பற்றி வருகின்றனர்.
எரிபொருள் விலைசூத்திர விடயத்திலும் திசைகாட்டியினர் மக்களை ஏமாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.