
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்ற உத்தரவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளிலிருந்து கசிந்த வினாக்களுக்காக, பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் குறித்த பரீட்சை மீண்டும் நடத்துவது பொருத்தமற்றது என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே அவர் இதனை அறியப்படுத்தினார்.
இந்த மனுக்களைப் பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் பிரதிமன்றாடியார் நாயகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் முன்னதாக இடைக்காலத் தடை உத்தரவு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
