இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி” (Antibody Vaccines) தொடர்பான விசாரணை நேற்று 19 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்றீரியாக்கள் மற்றும் உப்பு இருந்தமை, ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகமவினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது
குறித்த தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போது, சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல, உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு , இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் Antibody தடுப்பூசி, நாட்டில் பயன்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமை மற்றும் சிக்கல்கள் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
பயன்பாட்டின் போது ஏற்பட்ட பல சிக்கல்கள் குறித்து பெறப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, மருந்தின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒரு சிக்கலான சூழ்நிலை கண்டறியப்பட்டது.
மேலும் பாதுகாப்பு மற்றும் இடர் மதிப்பீட்டு துணைக்குழு குறித்த மருந்தை பயன்பாட்டிலிருந்து அகற்றுமாறு மருத்துவ விநியோகப் பிரிவுக்குத் தெரிவித்தது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, போலியான ஆவணங்களை தயாரித்து, 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, இந்த மருந்து உற்பத்தியின் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடி இடம்பெற்றமை தெரிய வந்தது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டோக்ஸிமேப் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
விசாரணைகளின்படி, தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரான, “அருண தீப்தி” என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, 2023 ஒக்டோபர் 31 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
போலியான ஆவணங்களை தயாரித்து, இந்தியாவில் இருந்து 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் , முதலாவது சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட சுதத் ஜனக பெர்னாண்டோவின் மகன், Ospelts Life Science Productions GMBH pvt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், இந்த நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளுக்குத் தேவையான மருந்து குப்பிகளை, அந்த நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதி செய்ததாக நீதிமன்ற வழக்கின் போது தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது, சுதத் ஜனக பெர்னாண்டோவின் மகன், மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தாங்கள் இறக்குமதி செய்த மருந்து கரைசல் ஒன்றை வழங்கியிருந்தார்.
அதன்பின்னர், இறக்குமதி செய்த பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த இந்திய நிறுவனத்திற்கு, குறித்த கரைசலின் மாதிரியின் ஒரு பகுதியை அனுப்பி ஆய்வு செய்து வாக்குமூலம் பெறப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டது.
அந்த வாக்குமூலத்தின் பிரகாரம், குறித்த கரைசல் தங்களின் பெயரைக் கொண்டிருந்தாலும், முதலாவது சந்தேக நபரான சுதத் ஜனக பெர்னாண்டோவின் மகனுடன் எந்த வகையான ஒப்பந்தத்திலும் தாங்கள் கையெழுத்திடவில்லை எனவும், இந்த கரைசல் தங்களது நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை எனவும் குறித்த இந்திய நிறுவனம் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அப்போது சுகாரார அமைச்சராக இருந்த ரம்புக்வெல்ல, இந்த மருந்து இறக்குமதி தொடர்பில் தனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என தெரிவித்தார்.
மருந்து இறக்குமதி தொடர்பான சந்தேகத்திற்குரிய சம்பவம் தொடர்பான முறைப்பாடு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் செய்யப்பட்டதாகவும், அமைச்சின் டெண்டர் நடவடிக்கைக்கும் அமைச்சருக்கும் தொடர்பில்லை எனவும், கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துவரும் விசாரணைகளின்படி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள்
மேலும், இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குறித்த இம்யூனோகுளோபுலின் மருந்தானது, இலங்கையில் 2023 ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதோடு, மேலும் மருந்தின் தரம், பாதுகாப்பு, மருத்துவ மற்றும் மருந்தியல் நிலை ஆகியவற்றின் சரியான மதிப்பீட்டிற்குப் பிறகு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்த மருந்துக்கான பதிவை வழங்கியதாக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர், விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் யையொப்பத்துடன், சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவர் சார்ந்த நபர்களின் கைதுகள்
2024 பெப்ரவரி 02 : முன்னர் சுகாதார அமைச்சராகவும், அப்போதைய (2024 பெப்ரவரி 02) சுற்றாடல்துறை அமைச்சராகவும் இருந்த, கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்பபுலனாய்வு பிரிவனரால் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில், அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டார். அதனைத்தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க
அன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கிய போது, அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024 பெப்ரவரி 03 : கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை, 2024 பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டது.
2024 பெப்ரவரி 04 : கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
2024 பெப்ரவரி 06 : கைது செய்யப்படும் போது அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
2024 செப்டம்பர் 11 : கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.
2025 மே 7 : முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
2025 மே 20 : கெஹலிய ரம்புக்வெல்லவை ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2025 மே 21 : கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில், சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகள் தொடர்பில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள, அவரின் மகனும் இலங்கை கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2025 ஜீன் 11 : கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டா.
சுகாதார அமைச்சிற்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம், அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடா்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் பிரகாரம், எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவரான குறித்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
2025 ஜீன் 18 : கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2025 ஜீன் 18 : நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது
வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்தது, அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து, இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025 ஜீன் 18 : பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
2025 ஜீன் 18 : கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் 134,097,731.39 ரூபா பெறுமதியான சொத்துக்கள், 40,000,000 ரூபா பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 20,500,000 பெறுமதியான பென்ஸ் ரக கார் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.