தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்தை ஓரு போதும் ஏற்க முடியாது.

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காகத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்குக் கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.

மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை நாமும் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாகச் சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்திப் பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

13ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்