
தமிழரசுக்கட்சியின் முடிவும் மட்டக்களப்பு உறுப்பினர்களின் நிலைப்பாடும்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிறேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு உத்தியோகபூர்வமானதல்ல என்றும் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களிடம் நாம் வினவிய போது
இது சுமந்திரனின் முடிவு தானே தவிர இது கட்சியின் முடிவோ அல்லது கட்சியின் தலைவர் எடுத்த முடிவோ இல்லை அத்துடன் நான் பொது வேட்பாளராக இருப்பதால் கருத்து பதிவு செய்வதை தவிர்க்கிறேன் என தமிழ்பொது வேட்பாளரும் இலங்கை தமிரசுக்கட்சியின் உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்திற்கு மத்திய குழு உறுப்பினராகிய எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் நான் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் அறிவித்துள்ளேன். ஆகவே சுமந்திரனின் முடிவை நான் ஏற்கவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் இது ஆகவே கட்சியின் உறுப்பினர்கள் அதன்படியே சஜித் பிரேமதாசவை ஆதரிப்போம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் இது. இதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதன்படியே செயற்படுவோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் கருணாகரன் சோபனன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
