தமது மகளை கட்டுப்படுத்த முடியவில்லை: பொலிஸ் நிலையத்தில் நஞ்சருந்திய பெற்றோர்!

வெலிமடை பிரதேசத்தில் தனது 12 வயது மகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவில்லை என்ற காரணத்தினாலும், குழந்தைக்கு ஏற்பட்ட அநீதியாலும் விரக்தியடைந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை நஞ்சி அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

12 வயது சிறுமியொருவரை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதாக தெரிவித்து அவரின் பெற்றோர் வெலிமடை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்ததை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சீர்திருத்ததுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறுமியின் தந்தை நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

கடந்த 11 ஆம் திகதி குறித்த சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அதற்கமைய சிறுமி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்போது இவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தபட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மீண்டும் சிறுமி நகரில் இருப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் பெற்றோருக்கு இதுதொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மருத்துவ பரிசோதனையின் பிரகாரம் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 28 வயதுடைய நபரொருவர் தொடர்பில் கிடைத்த தகவலை தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டு ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும், குறித்த சிறுமி மீண்டும் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததன் பின்னர் மீண்டும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் நிலையத்துக்கு வந்த சந்தரப்பத்தில் அருகிலிருந்த பொது கழிப்பறைக்குச் சென்று சிறுமியின் தாய், தந்தை இருவரும் நஞ்சி அருந்தியிருக்கிறார்கள்.

சிறுமியை கட்டுபடுத்துவது தொடர்பில் அவர்களுக்கு ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாகவே நஞ்சி அருந்தியிருந்தார்கள்.

சிறுமியின் தந்தை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். ஆனால், சிறுமியின் தாயின் உடல் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.