தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு – அங்கஜன் இராமநாதன்
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி கௌதாரிமுனை காற்றாலை தொடர்பான கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி, கௌதாரிமுனை காற்றாலை திட்டம் உருவாக்கப்படுவதனால் பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
விசேட கூட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கௌதாரிமுனை காற்றாலை அமைப்பதன் மூலம் மக்களுக்கு முழுமையான நன்மைகள் கிடைக்க வேண்டும். அதற்கமைய முதலீட்டாளர்களுடன் நிபந்தனைகளை உள்ளடக்கிய உடன்படிக்கைகள் முன்வைக்கப்படாமல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அனுமதி வழங்குவது சரியாகாது.
மாறாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அனுமதி வழங்கினால் அது அவரது தன்னிச்சையான முடிவாக மட்டுமே அமையும். கூட்டத்தின் முடிவாகாது – என்றார்.
இக்கூட்டத்தில் யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்