தனி நாடாக பலஸ்தீனம் அங்கீகாரம்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.

இன்று( 21)முதல் ‘சுதந்திர நாடாக பலஸ்தீனம்’ என்பதை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என அவுஸ்திரேலிய பிரதமர் என்டனி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை பிரிட்டன் மற்றும் கனடாவின் பிரதமர்களும் வெளிப்படுத்தி பலஸ்தீன மக்களுக்கான தங்களது ஒருமித்த ஆதரவை மீண்டுமொருமுறை தெரிவித்துள்ளனர் .

ஜி7 கூட்டமைப்பிலிருந்து முதல் நாடாக, பலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்திருப்பதும் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

காஸாவின் மிகப் பாரிய நகரான காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் மிகத் தீவிரமாக தாக்குதல் , கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், காஸாவில் அமைதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய முக்கிய நகர்வாக பாலஸ்தீனம் சர்வதேச சமூகத்தால் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடியளித்து காஸா போரில் விரைவில் தீர்வு எட்ட வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.