தனது மகளுடைய தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அக்ஷய் குமார்
தனது மகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு நிகழ்நிலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு பேசிய அவர், தனது மகள் அந்நியர்களுடன் ஒன்லைன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவள் ஆணா அல்லது பெண்ணா என கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும், “பெண்” என்று பதிலளித்த பிறகு, நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி அவளிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
பின்னர் தனது மகள் உடனடியாக விளையாடுவதை நிறுத்திவிட்டு தனது தாயிடம் இதைப் பற்றி தெரிவித்ததாகவும் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்தார்.
மேலும், “இப்படித்தான் சில விடயங்கள் ஆரம்பமாகின்றன. இதுவும் சைபர் குற்றத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது, நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், சைபர் காலம் என்று ஒரு காலம் இருக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், அந்த காலத்தில் மாணவர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான குற்றங்கள் தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். மாணவர்களை குறிவைத்து ஒன்லைன் துன்புறுத்தல் மற்றும் பண மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த தான் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் சைபர் குற்ற வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளே ஒன்லைன் விளையாட்டு தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகமாக பாதிப்படைகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.