
தடுப்பூசியில் பாக்டீரியா? – மருந்து மாஃபியாவுக்கு எதிராக சஜித் கடும் சாடல்
தரமற்ற தடுப்பூசிகள் காரணமாக 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளில், தடுப்பூசிகளில் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
இதன் விளைவாக, இறக்குமதி செய்யப்பட்ட 270,000 தடுப்பூசி மருந்துகளை அரச வைத்தியசாலைகளிலிருந்து தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) மீளப் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசிகள் அவசர கொள்வனவு நடைமுறைகளின் கீழ் வாங்கப்பட்டதா? அல்லது முறையான தரப் பரிசோதனைகள் செய்யப்பட்டனவா? என சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் மருந்து மாஃபியாக்களுக்கு எதிராகத் தமது கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
“22 மில்லியன் குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது ஒரு அடிப்படை மனித உரிமை. இந்த மருந்து மாஃபியாவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தினார்.
