அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு அரிதான மற்றும் ஆடம்பரமான வரவேற்பை வழங்கிய நிலையில், அமெரிக்கா–சீனா உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஷி ஜின்பிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் Joint Base Andrews விமானத் தளத்தில் வந்திறங்கியபோது ட்ரம்பும் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் நேரடியாகச் சென்று வரவேற்றனர். சிவப்பு கம்பளம், இராணுவ மரியாதை, இரு நாடுகளின் தேசிய கீதங்கள் மற்றும் விமானப்படை நிகழ்வுகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, அரிய கனிமங்கள், தைவான், பாதுகாப்பு மற்றும் ஈரான் உள்ளிட்ட விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஏற்கனவே வர்த்தக இடைநிறுத்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.










