அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களின் செய்தியாளர்களை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிப்பதைத் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய அமெரிக்க தொலைக்காட்சி ஊடகங்கள் ஜனாதிபதியின் கூட்டு செய்தி ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளன.
ABC, CBS, NBC, Fox News மற்றும் CNN ஆகியவை சுழற்சி முறையில் வெள்ளை மாளிகையின் ‘TV pool’ செய்தி சேவையை வழங்கி வருகின்றன. CNN-க்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக வேறு ஊடகத்தை அனுப்பாமல் இந்தக் கூட்டு ஒளிபரப்பை நிறுத்துவதற்கு மற்ற முக்கிய தொலைக்காட்சி வலையமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதற்கிடையில், CNN, MS NOW மற்றும் Politico ஆகியவை தங்களது செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. தங்களது செய்தி நிறுவனங்களை செய்தி வெளியீட்டின் காரணமாகத் தடை செய்திருப்பது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் வழங்கும் ஊடகச் சுதந்திர உரிமைகளை மீறுவதாக அவை நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை தனது சொந்த காணொளி ஒளிபரப்பு சேவையான “Trump TV”யை தொடங்கியுள்ளது. இதனால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் அமெரிக்க ஊடகங்களுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.










