ட்ரம்ப்பின் கருத்தை மறுக்கும் புதிய மருத்துவ ஆய்வு

கர்ப்ப காலத்தில் பெரசிட்டமோல் (Paracetamol) உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஓட்டிசம் (Autism) அல்லது ADHD போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் புதிய விரிவான மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் பெரசிட்டமோல் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்த ஆய்வு மறுத்துள்ளது.

‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், லட்சக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய 43 மிக முக்கியமான ஆய்வுகள் மீளாய்வு செய்யப்பட்டன.

பெரசிட்டமோல் எடுப்பதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லண்டன் செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது கடுமையான வலி ஏற்படும் போது பெரசிட்டமோல் எடுக்காமல் இருப்பது, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெரசிட்டமோல் (அமெரிக்காவில் அசிட்டமினோஃபென் என அழைக்கப்படுகிறது) ஓட்டிசம் பாதிப்புடன் தொடர்புடையது எனக் கூறி, கர்ப்பிணிப் பெண்கள் அதனைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், அசிட்டமினோஃபென் மருந்திற்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

“கர்ப்பிணிப் பெண்கள் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. தலைவலி அல்லது காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்ற அச்சத்தை இந்த ஆய்வு முடிவுக்குக் கொண்டு வரும் என நம்புகிறோம்,” என்று கிங்ஸ் கல்லூரி லண்டனின் பேராசிரியர் கிரைன் மெக்அலோனன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முக்கிய மருத்துவ அமைப்புகள் ஏற்கனவே பெரசிட்டமால் பாதுகாப்பானது என்றே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இந்த புதிய ஆய்வு அந்த நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.