ட்ரம்பின் கட்டண வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது.

இந்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்துக்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது.

எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார்.

அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, இருப்பினும் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன.