“டொனால்ட் ட்ரம்ப் தான் எனது அப்பா” : அதிர்ச்சி கொடுத்த பெண்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

55 வயதான நெக்லா ஓஸ்மென் என்ற பெண், தனக்கு ட்ரம்ப்புடன் ஒற்றுமை இருப்பதாகக் கூறி, அதை நிரூபிக்க மரபணு பரிசோதனை கோருகிறார்.

துருக்கிய தலைநகர் அங்காராவில் வசிக்கும் அவர், செப்டம்பர் 25 ஆம் திகதி அங்காரா 27ஆவது குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் ஆரம்பத்தில் வழக்கை நிராகரித்த போதிலும், இப்போது அவர் மேல்முறையீடு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆவணங்களின்படி, 1970 ஆம் ஆண்டு பிறந்த நெக்லா, சதி மற்றும் துர்சுன் ஓஸ்மெனின் மகள் ஆவார்.

இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், நெக்லா ஒரு வளர்ப்பு மகள் என்று சதி அவளிடம் கூறியுள்ளார்.

1970 இல் அங்காராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த ஒரு குழந்தை பரிமாற்றம் பற்றி அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சதியின் குழந்தை இறந்து பிறந்ததாகவும், அதே நேரத்தில் சோபியா என்ற அமெரிக்கப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை சதியின் குடும்பத்திடம் வளர்ப்பதற்காகக் கொடுத்ததாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

சோபியா என்ற அந்தப் பெண், ட்ரம்புடனான திருமணத்திற்குப் புறம்பான உறவின் விளைவாகக் குழந்தை பிறந்ததாகவும் அவர்களிடம் கூறியுள்ளார்.

சோபியாவும் ட்ரம்பும் எப்படி சந்தித்தார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், குழந்தை பிறந்ததும், சோபியா ட்ரம்பின் புகைப்படத்தைக் காட்டி தந்தையைப் பற்றிச் சொன்னதாக சதி, நெக்லாவிடம் கூறியுள்ளார்.

மரபணு சோதனை மூலம் தான் அவரது மகள் என்பதை நிரூபிக்க முடியும் என்று நெக்லா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஒரு நல்ல தந்தை என்றும், அவர் தன்னை நிராகரிக்க மாட்டார் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் ஆரம்பத்தில் மனுவை நிராகரித்த போதிலும், நெக்லா தொடர்ந்து போராடி வருகிறார்.

அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களிலும் அவர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.