டெல்லி குண்டுவெடிப்பு: 9 பேர் பலி 20 பேர் காயம்

இந்தியா- புது டில்லியில், திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும் , 20திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற காரில் இருந்து அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட இருபது பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த காரில் மூன்று பேர் இருந்ததாகவும், அது தற்கொலை குண்டுதாரியா என்றும் விசாரித்து வருவதாகவும், சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“மூன்று பேர் அமர்ந்திருந்த ஹண்டாய் ஐ-20 (Hyundai i20 ) ரக காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையினர் இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடைய காரின் உரிமையாளர் முகமது சல்மானை மாலையில் கைது செய்து, வாகனம் குறித்து விசாரித்தனர், அவர் அதை ஓக்லாவில் உள்ள தேவேந்திரா என்ற நபருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விற்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பின்னர், அந்த வாகனம் அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டது, மேலும் அது மீண்டும் புல்வாமாவில் தாரிக் என்ற நபருக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பை அடுத்து , டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் நகர எல்லைப் புள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மாலை 6.52 மணியளவில் மெதுவாகச் சென்ற வாகனத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் , தீ விபத்து இரவு 7.29 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற வாகனத்திற்குள் பயணிகள் இருந்துள்ளனர். என்றும் டெல்லி பொலிஸ் தடய அறிவியல் ஆய்வகம், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) ஆகிய அனைத்து நிறுவனங்களும் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றன.

டெல்லி எல்லையை ஒட்டியுள்ள ஃபரிதாபாத்தில் ஒரு காஷ்மீர் மருத்துவரின் வாடகை வீட்டில் இருந்து சுமார் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

ஹரியானா காவல்துறையினர், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து, ஃபரிதாபாத்தின் தௌஜ் பகுதியைச் சேர்ந்த டாக்டர் முசம்மில் கனாயை கைது செய்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தடயவியல் அறிவியல் ஆய்வகம் ஆய்வு செய்து வருகின்றன.

மேலும், சம்பவ இடத்தில் ஆர்.டி.எக்ஸ் வாசனை எதுவும் கண்டறியப்படவில்லை, மேலும் அனைத்து கோணங்களிலும் முழுமையாக விசரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் 18 ஆண்கள் உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் 12 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், எட்டு பேர் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் இறந்ததாகவும், ஒரு சிதைந்த உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த 34 வயது அசோக் குமார் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 35 வயது அமர் கட்டாரியா என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை, அவர்கள் 28 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.

தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.