டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை தலைக்கவசத்தால் அடித்து கொலை!
டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தலைக்கவசத்தால் (Helmet) தாக்கி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் மிகவும் நெரிசலான ‘கன்னாட் பிளேஸ்’ (Connaught Place) பகுதியில் கடந்த ஜனவரி 3ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லி பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலதிபர் சிவம் குப்தா என்பவருக்கும், மூன்று உணவு டெலிவரி ஊழியர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர்கள், தாங்கள் வைத்திருந்த தலைக்கவசங்களால் சிவம் குப்தாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவம் குப்தா, 16 நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த டெல்லி பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளது.
தலைமறைவாக உள்ள மூன்றாவது சந்தேக நபரைத் தேடும் பணிகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
