டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

 

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை அவர்கள் போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101கதா’ கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறையாசார் நிபுணர்களிடத்தில் ஆலோசிக்காமல் இவ்வாறானதொரு அறிக்கையை தயாரித்துள்ளமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் நியதிகளுக்கு புறம்பானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர் ரொஹான் சமரஜீவ,

நிகழ்காலம் பற்றிய தெரிவு மற்றும் எதிர்காலம் பற்றிய நோக்கு என்பவை இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாகும். 90 களில் பல்வேறு நிறுவனங்களுக்கும் இங்கு முதலிட அழைப்பு விடுக்கப்பட்டது.

அன்று டெலிகொம் நிறுவனத்திடம் தொலைத்தொடர்பு வலையமைப்பொன்று இருக்கவில்லை. மொபிடெல் நிறுவனத்தில் பங்கு இருந்தாலும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடமே காணப்பட்டது.

டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அரசாங்கம் மொபிடெல் நிறுவனத்திமிருந்து சேவையை பெற்றுகொண்டது. இருப்பினும் மொபிடெல் நிறுவனத்தின் முகாமைத்துவ உரிமத்தை டெல்ஸ்டா நிறுவனத்திடமே காணப்பட்டது.

டெலிகொம் முகாமைத்துவ உரிமம் ஜப்பான் நிறுவனத்திடம் காணப்பட்டது. அதனால் டொலிகொம் நிறுவனத்தின் தலைவராக இலங்கையர்கள் இருந்தபோதிலும் ஜப்பானிய பிரதம நிறைவேற்று அதிகாரிகளினாலேயே முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யுத்த காலத்திலும் 4 கையடக்க தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களும் 3 நிலையான தொலைபேசி இணைப்பு நிறுவனங்களும் காணப்பட்டன.

அவற்றில் டயலொக் நிறுனத்தில் மாத்திரமே இலங்கையர் ஒருவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காணப்பட்டார். இருப்பினும் அந்நிறுவனம் முழுமையாக மலேசியாவிற்கு சொந்தமாக இருந்தது. இவ்வாறிருக்க சிலர் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மந்திரம் போல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை அரசாங்கம் முழுமையாக கொண்டிருந்த போது கொழும்பு லோட்டஸ் வீதியில் காணப்பட்ட தலைமையகத்திலிருந்தே அனைத்து சர்வதேச அழைப்புக்களும் பரிமாற்றப்பட்டன.

அந்த செயன்முறைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இலங்கை சர்வதேச நாடுகளிடத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும். வயர் மற்றும் மென்பொருட்கள் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் முழு வலையமைப்பும் முடங்கிவிடும். மென்பொருள் கட்டமைப்புக்கு மாற்று முறைமைகளும் காணப்படவில்லை.

டெலிகொம் நிறுவனத்தை அரசாங்கம் நிர்வகித்த போது கூட தேசிய பாதுகாப்பிற்கு இவ்வாறான சவால் காணப்பட்டது. அக்காலத்தில் புலிகள் அமைப்பினால் இரு தடவைகள் தாக்குலும் மேற்கொள்ளப்பட்டது.

தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் மாற்று முறைமைகளை பின்பற்றுமாறு ஜப்பான் நிறுவனத்திடம் நாம் அறிவுறுத்தியிருந்தோம். அவர்களும் உடனடியாக புதிய முதலீடுகளுடன் புதிய இடமொன்றில் மாற்று முறைமையொன்றை நிறுவினர்.

டெலிகொம் நிறுவனம் முழுமையாக அரசாங்கத்தின் வசமாக காணப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் நிறுவனத்தின் பாதுகாப்பை பொருட்படுத்தவில்லை. இருப்பினும் நாம் பாதுகாப்பற்ற இடம் எதுவென அறிந்துகொண்டதன் காரணமாகவே தகவல்களை சேமிக்கும் கட்டமைப்பொன்றை மாற்று இடத்தில் நிறுவினோம்.

அரச நிறுவனத்தால் செய்ய முடியாத ஒன்றை, ஜப்பானிய நிறுவனம் செய்தது. பெரும்பாலான அரச நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகளின் பாதுகாப்பைக் கவனிப்பதில்லை. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யவும் முடியாது. பணமும் இல்லை. இவை சில மேற்பார்வைகளுடனேயே தனியார் மயப்படுத்தப்படுகின்றன.

மேலும் நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும். உதாரணமாக, அன்று டெலிகொம் மற்றும் ஜப்பானிய நிறுவனம் செய்த தவறு காரணமாக,  ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. அது சட்டப்படி அபராதமாக இல்லாத போதிலும், அந்தத் தொகையை வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டுகளில் எமது ஆட்சியின் போது, சர்வதேச அழைப்புகளில் ஏகபோக உரிமை இருந்தது. இன்று, சர்வதேச இணைப்புகள் டெலிகொம் ஊடாக மேற்கொள்ளப்படுவதில்லை. டெலிகொம் நிறுவனத்திற்கு ஒரே ஒரு கேபிள் நிலையமே உள்ளது.

இன்று, ஏனைய நிறுவனங்களிலிருந்தும் இணைய இணைப்புகளைப் பெற முடியும். அரசாங்கம் இன்று டெலிகொம்மின் இணைய இணைப்பை மாத்திரமா பயன்படுத்துகிறது? அது தொடர்பில் அறிந்துகொள்ளாமல் தேசிய பாதுகாப்பு குறித்து மந்திரம் போல் கூறித்திரிகிறார்கள்.

இன்று பெரும்பாலான அரசாங்க தகவல்கள் ஜிமெயில் மூலம் பரிமாறப்படுகின்றன. ஜிமெயில் வெளி நாடுகளுக்குச் சொந்தமானது. அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பெரும்பாலானோர் வட்ஸ்அப் மூலம் அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.

வட்ஸ்அப் யாருக்குச் சொந்தமானது? வட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகின்றன. எனவே, டெலிகொம் நிறுவனமாக, இருந்தாலும் அல்லது தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து இணைய இணைப்புகளை பெற்றுக்கொள்வதால் அந்த நிறுவனங்களுக்குத் தரவுகள் செல்லாது.

மேலும், இவை அனைத்தும் ஏனையவர்கள் அவற்றை அணுக முடியாதவாறு கடவுச்சொற்கள் மற்றும் பிற முறைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது, எனவேஇ டெலிகொம் நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால், அரச தகவல்கள் வெளியே செல்லும் என்று கூறுவது ஒரு பெரிய மாயையாகும்.

இலங்கையில் இரண்டு தரவு மையங்கள் உள்ளன. டெலிகொம் நிறுவனத்திற்கு ஒன்று. மற்றொன்று டயலொக் நிறுவனத்துக்கு உரியது. இவை அரசாங்கத்தின் தகவல்களைச் சேமிப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு வங்கியில் பாதுகாப்பான வைப்புப் பெட்டியின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுப்பது போல. அந்த வைப்புப் பெட்டி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது? குறித்த வங்கியிடமா? இல்லை. அந்தப் பெட்டியை வாடகைக்கு எடுத்தவரிடமே அதன் திறப்பு உள்ளது.

அவ்வாறே, அரசாங்கத் தரவுத்தளங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டுமே அணுக முடியும். இது சர்வதேச முறையாகும். கோப்பு ஒன்பது ஒரு பழைய எண்ணமாகும். இப்போது தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே ஒரு பிரதியை வைத்திருப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். ஆனால் எம்மால் மட்டுமே அவற்றை அணுக முடியும்.

அரசியல்வாதிகளின் சகோதரர்கள் உறவினர்களும் அரச நிறுவனங்களில் நியமிக்கப்படுகிறார்கள். அதன் பிறகுதான் முறைகேடு நடக்கிறது. பொதுவாக, ஒரு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அறிவுஞானமுள்ளவர்கள் இருக்க வேண்டும். ஏனைய நாடுகளில் அவற்றை எவ்வாறு செய்கின்றார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

இது வெறும் எண்ணங்களின் அடிப்படையில் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது. நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இருந்து தகவல்களை எடுத்து அறிக்கையை தயாரித்திருக்கலாம்.

ஆனால் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் கொள்கைகளுக்கு மாற்றமாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்