டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு : 14 பேருக்கு தண்டம் விதிப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவருக்கு தலா 3500/- ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் வீட்டு வளாகத்தில் குடம்பிகள் இருந்ததாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த 14 பேருக்கும் ஒருவருக்கு 3500/- ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்து வந்துள்ள நிலையில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளது.
இந்நிலையில் செல்வநாயகபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் தெரிவித்தார்.
மேலும் குறித்த பகுதியில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் வீட்டு வளாகங்களை சோதனை இட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்