டி20 உலகக் கிண்ணம்: முடிவுக்கு வருகிறதா மோதல்?

 

எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணி முழுமையாகப் பங்கேற்பதை உறுதி செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) முதலில் தயக்கம் காட்டியது.

ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒப்பந்தமாகியிருந்த முஸ்தபிசுர் ரஹ்மானை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) ஆலோசனையின் பேரில் அந்த அணி விடுவித்தது.

இதற்குப் பதிலடியாகவே, இந்தியாவுக்குச் செல்ல பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்தது.

பங்களாதேஷ் அணி தனது குழுநிலை (Group C) போட்டிகளை இந்தியாவில் விளையாடுவதற்குப் பதிலாக இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து தற்போது ஐசிசி பங்களாதேஷின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் பாதுகாப்புத் திட்டமிடலில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என ஐசிசி உறுதியளித்துள்ளது.

இந்தநிலையில் போட்டிகளில் விளையாடாவிட்டால் புள்ளிகள் இரத்து செய்யப்படும் என ஐசிசி ‘இறுதி எச்சரிக்கை’ (Ultimatum) விடுத்ததாக வெளியான செய்திகளை அமினுல் இஸ்லாம் தலைமையிலான பங்களாதேஷ் வாரியம் முற்றாக மறுத்துள்ளது.