டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதி

 

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இதன்படி சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்குத் தகுதிபெற்றுள்ளன.

ஹராரேவில் இடம்பெற்ற ஆப்பிரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் நமீபியா மற்றும் சிம்பாப்வே அணிகள் டி20 உலகக்கிண்ண தொடரில் தமது இடங்களைப் பதிவு செய்துள்ளன.

இதற்கமைய இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இதுவரை டி20 உலகக்கிண்ண தொடருக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண தொடரானது 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.