டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களில் சீன,ரஷ்ய தலைவர்கள் பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களின் பின்னர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.

ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த காணொளி அழைப்பில் இரு நாட்டு தலைவர்களும் டிரம்பின் நிர்வாகத்துடனான தங்கள் வருங்கால தொடர்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் இருதரப்பு உறவுகளை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்வதாகவும் இதன்போது அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பெய்ஜிங் மற்றும் மொஸ்கோவின் மூலோபாய ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும், பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்தவும், நியாயமான நலன்களைப் பாதுகாக்கவும் முன்வருமாறு விளாடிமிர் புடினுக்கு சீ ஜின்பிங் அழைப்பு விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவும் சீனாவும் ‘நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடிப்படையில்’ உறவுகளை வளர்த்து வருவதாக சீ ஜின்பிங் கூறியுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா மற்றும் சீனாவின் கூட்டுப் பணி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.