டிரம்ப்புக்கு அறிவுரை வழங்கிய மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விமர்சித்துள்ளார். இந்த போரை தீவிரமாகவும், சீராகவும் முன்னெடுத்து செல்ல வேண்டும், என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

தென்கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்ரோன், அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார்.

“இது ஒரு நாடகம் அல்ல” என மக்ரோன் எச்சரித்தார்.

“நீங்கள் போரில் தீவிரமாக இருக்க விரும்பினால், முந்தைய நாள் சொன்ன கருத்தை அடுத்த நாட்களில் மாற்றி பேசக்கூடாது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளில் தலைவர்கள் அடிக்கடி பொதுக் கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று மக்ரோன் அறிவுரை வழங்கினார்.

இதேவேளை, பிரான்ஸை ஹோர்மூஸ் நீரிணைக்கு அழைத்தபோது படைகளை அனுப்பாமை மற்றும் வான்பாதைக்கு தடை போட்டமை ஆகியவற்றால் கோபமடைத்திருந்த ட்ரம்ப், அதன் வெளிப்பாடாக, “நான் பிரான்ஸ் மக்ரோனை அழைத்தேன், அவருடைய மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார், மேலும் அவர் தாடையில் விழுந்த அடியிலிருந்து இன்னும் மீண்டு வருகிறார்” என நக்கலாக தெரிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த இந்த கருத்து தொடர்பில் தென்கொரியாவில் மக்ரோனிடம் கேள்வியெழுப்பிய போது, டிரம்பின் கருத்துக்கள் நாகரிகமானவையாகவோ அல்லது தரமானவையாகவோ இல்லை, எனவே நான் அதற்கு பதிலளிக்கப் போவதில்லை என மக்ரோன் தெரிவித்துள்ளார்.