டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்
-யாழ் நிருபர்-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் பணி வெண்கரம் அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வெண்கரம் அமைப்பின் சித்தங்கேணி அலுவலகத்தில் இந்த பணியானது, வெண்கரத்தின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெண்கர அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தன்னார்வ ரீதியாக மக்களிடம் சேர்த்த நிதியை பயன்படுத்தி இவ்வாறு கற்றல் கையேடுகளை தயாரித்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையிலேயு அதன் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், கலந்துகொண்ட அனைவரும் வெண்சுடர்கள் ஏற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து உரைகள், கையேடுகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கானை கல்வி கோட்டத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளர் நொபேட் உதயகுமார், வலிகாமம் கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் சுகுணா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




