
டிட்வா சூறாவளி: தொடர்பாடலை மீளமைக்க ‘ஸ்டார்லிங்க்’ உதவி!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தொடர்பாடல் வலையமைப்பை மீளமைக்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஆதரவு வழங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் முடங்கியிருந்த ஃபைபர் (Fiber) வலையமைப்பைச் சீரமைக்கும் பணிகளுக்காக, ஸ்டார்லிங்க் நிறுவனம் 25 செய்மதித் தொடர்பாடல் இணைப்புகளை (Satellite Connections) எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கையிலுள்ள 16,000 தொடர்பாடல் கோபுரங்களில் சுமார் 4,500 கோபுரங்கள் செயலிழந்திருந்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தொடர்பாடல் கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய முடக்கத்தை விரைவாகச் சீர்செய்ய இந்தச் சர்வதேச ஒத்துழைப்பு பெரும் பக்கபலமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
