அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ள புதிய ஆதரவு, குறிப்பாக கிளவுட் உட்கட்டமைப்பு மற்றும் துறைமுக நவீனமயமாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு அமெரிக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க தொழில்நுட்பம், வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்கனவே அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், கிளவுட் கணினியியல், தரவு மையங்கள் மற்றும் பிற டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










