டிசம்பரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் கீழ் மட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை எனப் பிரதமரும் கல்வி அமைச்சருமான வெளியிடப்பட்ட கருத்துக்கு, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு கூட்டமொன்றில் பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தாலும், இந்த முடிவுக்கு எதிராகத் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திட்டு கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் தெளிவாக அறிவித்துள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதி ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

எந்தவொரு ஆய்வு அடிப்படையுமின்றி, தேசிய கல்வி நிறுவகத்தின் பெயரால் கல்வி அமைச்சர் இந்த முடிவைத் தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கண்டித்த அவர், இந்த முடிவில் எந்த நடைமுறைத் தன்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் .

தமது கோரிக்கைக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் உரிய பதில் அளிக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலுள்ள அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என எச்சரிப்பதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .