ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே டகாயிச்சி?

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாயிச்சி பெற்றுள்ளார்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டின் தலைமையை ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அசாதாரண அரசியல் ஸ்திரமின்மை, விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இவர் பொறுப்பேற்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாயிச்சி, தன்னுடன் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றார்.

இது கட்சித் தலைமைப் பதவியில் அவர் வகிக்கும் மூன்றாவது வெற்றியாகும்.

இந்த மாத இறுதியில் அவர் பிரதமராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திலேயே பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரிட்டிஷ் தலைவர் மார்கரெட் தட்சரை தனது முன்மாதிரிகளில் ஒருவராக பட்டியலிடும் 64 வயதான சனே டகாயிச்சி, ஜப்பானின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவரான படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்றுகூடலில் சனே டகாயிச்சி ஜப்பானின் புதிய பெண் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.