
ஜனாதிபதி ரணில் மாவை திடீர் சந்திப்பு தமிழ் அரசுக் கட்சியின் இறுதி தீர்மானம் ரணிலுக்கு சாதகமாக அமையலாம் ?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள மாவையின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விக்ரமசிங்க வெற்றிபெற்று வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விக்கிரமசிங்க தனது “முயலும் இலங்கை” (புலுவன் ஸ்ரீலங்கா) ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான பொது பேரணியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் அரசுக் கட்சி தனது ஆதரவை அறிவித்தது. எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சி உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என சேனாதிராஜா தெரிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உள்ளக ரீதியில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஒருசில தினங்களில் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானம் ரணிலுக்கு சாதகமாக அமையலாம் என கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

