ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!
நாட்டின் நிதிக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (வியாழன்) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தஇ சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்திறன் மிக்கதாக்குவதற்கு சிறந்ததொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் முழுமையான முன்னேற்றங்களை நெருக்கமாக ஆராய்ந்த பின்னர், மத்திய வங்கியினால் நிதி ஸ்திரமாக்கல் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஈடுகொடுக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.