ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித் பிரேமதாச

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும் ஏமாற்றி வருகின்றார், என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பொருட்களின் விலைகள், உணவு, பானங்களின் விலைகள், எரிபொருள் விலை, மின்சார கட்டணம், வரிகள் குறைப்பு, அரச சேவையாளர்களின் சம்பளத்தை ஒவ்வொரு 6 6 மாதங்களும் ஒரு தடவை அதிகரிப்பேன் என பல வாக்குறுதிகளை வழங்கினார். என்றாலும் மக்களின் எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி புஸ்வாணம் ஆகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டும் , என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றளவும் மக்கள் வாழ்வு சுருங்கிக் கிடக்கும் காலத்தில், வாழ்வாதாரம் குறைந்துள்ள காலத்தில், வீட்டு வருமானம் வீழ்ச்சி கண்டுள்ள காலத்தில், வாழ்க்கைச் சுமையை குறைக்கும் ஆட்சியை இந்த அப்பாவி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று நாட்டில் புதிய ஆட்சியாளர்களால் அவ்வாறானதொரு யுகம் உருவாக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருட்டு, ஊழல், மோசடி, இலஞ்சம் போன்றவற்றால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக ஆட்சிக்கு வர முன்னர் மேடை மேடையாக முழங்கினர். தாம் ஆட்சிக்கு வந்ததும் இலஞ்சம் ஊழல்களை ஒழித்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என்று கூறினாலும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என்று கூறுகிறார். மறுபுறம் எரிபொருள் விலை சூத்திரத்தை இல்லாதொழிப்போம் என கூறிய அநுரகுமார திஸாநாயக்க இன்று விலைசூத்திரத்தின் கைதியாகி, பெரும் முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு மாத்திரம் எரிபொருள் சலுகைகளை வழங்கி வருகிறார். சாதாரண மக்களை மறந்து செயற்பட்டு வருகிறார் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

மின் கட்டணமும் 33% குறைக்கப்படும் என்று கூறியும் இதுவரை குறைக்கப்படவில்லை. இன்று தேங்காய் வரிசைகள் கூட காணப்படுகிறது. அரிசியைக் கூட முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதும் பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. விநியோகஸ்தர்களின் பாக்கித் தொகைகளும் செலுத்தப்படவில்லை. உயர்தரப் பரீட்சை கூட பாடவிதானங்களை சரியாக பூரணமாக்காமல் நடத்துவதற்கு தயாராகியுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர் தரப்பு உறுப்பினர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறார். அவர்களால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியாது. பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியும். எம்மிடம் வேலைத்திட்டம் இருக்கிறது. எனவே ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.