
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ.ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
அதனை பயன்படுத்தி போலியான வாக்காளராகப் பதிவு செய்யும் அவலமும் நடக்கிறது என குற்றச்சாட்டாகக் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது பவார், இந்த போலியான அடையாள அட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்றும் அதற்கான இணையதளம் பற்றியும் குறிப்பிட்டார்.
இதனை யூடியூப் சேனல் ஒன்றில், பா.ஜ.க.வின் சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளரான தனஞ்ஜெய் வகாஸ்கார் கவனித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபருக்கு எதிராகவும், இணையதள உரிமையாளர் மற்றும் பயனாளருக்கு எதிராகவும் புகார் அளித்துள்ளார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின்படி 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
எனினும், அது முறைப்படியே நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், போலியான அடையாள அட்டை தயாரிப்பு மற்றும் போலியான வாக்காளராகப் பதிவு செய்தல் போன்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
			
