ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் – மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
“வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு ” என கூறிக்கொண்டு வடக்கு கிழக்கின் சிங்கள மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்காமல் தமிழ் உறுப்பினர்களை மட்டும் அழைத்த ஜனாதிபதி செயலகத்தின் ஒருதலைப்பட்சமான செயற்பாட்டை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் முஸ்லிம்கள் பல இழப்புக்களை இழந்து வந்துள்ளனர். அப்போதெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் பேச முஸ்லிம் தனிக்கட்சி இல்லை என கூறப்பட்டதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு அது முஸ்லிம்களை பாராளும்ன்றில் பிரதிநிதித்துவபடுத்தியது. ஆனாலும் அக்கட்சி முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடியதை விட தமது சுக போகங்களுக்கே அதிகம் போராடியது.
2001ம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அன்று அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் தரப்பாக கலந்து கொள்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் அமைச்சர் என்ற சுக போகத்தை விரும்பியதால் முஸ்லிம் தனித்தரப்பாக கலந்து கொள்ள மறுத்த துரோகத்தின் காரணமாக இன்று வரை முஸ்லிம் சமூகத்துக்கு தனித்தரப்பு கிடைக்கவில்லை.
அக்கட்சியின் செயல்களால் விரக்தியுற்றதனாலும் அக்கட்சி தன் நம்பகத்தன்மையை இழந்ததாலும் முஸ்லிம் சமூகத்தில் வேறு கட்சிகளின் தேவை உருவாகியது. ஆனாலும் இவ்வாறு உருவான ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்த போதும் அவர்களும் நாட்டில் எதை சுருட்டலாம்இ யாரை ஏமாற்றலாம் என்றுதான் முயற்சித்தார்களே தவிர முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பது பாராட்டும்படியான செயலாகும். ஆனாலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் எம்பிக்களை மட்டும் அழைத்து பேசுவதன் மூலம் இம்மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது.
புலிகளால் அனைத்து சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டு விரட்டப்பட்ட வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் இன்னமும் முறையாக நடக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள கொடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு தமிழ் மக்கள் போன்று ஒரே பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் முகம் கொடுப்பதால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை.
ஆகவே இது விடயத்தில் ஜனாதிபதி செயலகத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டை நாம் கண்டிப்பதுடன் உடனடியாக முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்