ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, முதலாவதாக மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்லவுள்ளார். அதனை தொடர்ந்து புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டாவது, புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்துவைக்கவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் புதிய கடவுச் சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளார்.அத்துடன், யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது . சில முக்கிய கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாளை முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி செல்லவுள்ளார்.இதன்போது வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.