
ஜனவரி முதல் கட்சியில் மாற்றங்கள்: ஜீவன் தொண்டமான்
-நானுஓயா நிருபர்-
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி முதல் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ராகல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
இம் மாற்றங்களினூடாக தொடர்ந்து செயற்படத் தயார்நிலையில் இருக்கிறோம், இதுவே காலத்தின் தேவைப்பாடு.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் என்ற பதவி அங்கீகாரமானது, கட்சி ஸ்தாபனம் மற்றும் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் அதேபோல் மலையகத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அதே நேரம் நாடாளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரிய நோக்கத்துடனே நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யானை சின்னத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் தனது மாவட்டத்தில் 2 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
நாமும் 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டோம். அது தற்போது ஒரு ஆசனம் ஆகியது, அதற்குக் காரணம் எமது ஆளுமை இன்மையல்ல, சிலரின் சூழ்ச்சியாகும்.
இதை நாம் அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும், இதனை நினைத்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.
அத்தோடு 6 உறுப்பினர்களை வென்றெடுத்த மலையகக் கட்சி தற்போது 2 உறுப்பினர்களைத் தன்வசமாக்கி நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கிறது.
