சேருவில – வெருகல் படுகொலையின் 37ம் ஆண்டு நாள்

-திருகோணமலை நிருபர்-

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று வெருகல் பிரதேசத்திலுள்ள பரிந்துரை செயற்பாட்டுக் குழுவினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், படுகொலை வெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆகியோரினால் சேருவில – ஈச்சிலம்பற்று(வெருகல்) படுகொலையின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று ஈச்சிலம்பற்று பிரதேசத்திலுள்ள பூனகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.

கடந்த 12.06.1986ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து ஈச்சிலம்பற்று நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உணவுப் பொருட்களை முற்று முழுதாக சிங்கள மக்கள் வாழும் பிரதேசமான சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்ற வேளையில் சேருவில – மகிந்hபுர பகுதியில் வைத்து அரச அதிகாரி 03 பேர் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்படி 21 பேரும் படுகொலை செய்யப்பட்டடு இன்றுடன் 37 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கப் பெறாத நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரியான மற்றும் முறையான நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட உறவுகளினால் இன்றைய தினம்  37ம் ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய யுத்தசூழலின் காரணமாக ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தினால் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வாராவாரம் வழங்கப்பட்டு வந்தன.

அந்தவகையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்குத்; தேவையான நிவாரணப்பபொருட்களை பொதுப் போக்குவரத்துக்கள் இல்லாத சூழ்நிலைகளில் ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்திலுள்ள மக்களின் மாட்டு வண்டில்களை பயன்படுத்தி எடுத்துச் செல்லுமாறு அப்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய  அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்ட நிலையில் நலன்புரி முகாம்களுக்கு பொறுப்பாக இருந்த அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டில்களில் பொருட்களை ஏற்றி செல்வதற்காக சேருவில பிரதேசத்திற்குச் சென்றார்கள்.

மேற்படி 21 பேரும் சேருவில பிரதேசத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் மகிந்தபுர(சிங்கள மக்கள் வாழும் கிராமம்) எனும் கிராமத்தில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வெட்டியும்இ துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் 19 தமிழர்களும் 02 முஸ்லிம்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

றம்பண்டா எனும் ஊர்காவல் படைத்தலைவரின் தலைமையில் இப்படுகொலை சம்பவம் இடம்பெற்றதாகவும் இச்சம்பவத்துடன் இலங்கை இராணுவத்தினரும் தொடர்புபட்டிருந்ததாகவும் உயிர் தப்பியவர்களும் படுகொலை வெய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.

இப்படுகொலை செய்யப்பட்டவர்களும் காயங்களுக்குள்ளாகி உயிர் தப்பியவர்களும் இரு வரிசைகளில் முழங்காலில் வைக்கப்பட்டு அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய நிலையில் கட்டுத் துவக்கினால் சுடப்பட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இப்படுகொலைச் சம்பவத்தை 20க்கு மேற்பட்ட ஊர்காவற்படையும் இராணுவமும் இணைந்து மேற்கொண்டதாகவும் இறந்த அனைவரது கைகளிலும் அடையாள அட்டை இருந்ததாகவும் படுகொலையின் பின்னர் அவ்விடத்திற்குச் சென்றவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச்சம்பவம் 12.06.1986 அன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்றிருந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்
1.தங்கராஜா – கிராம சேவகர் (பூமரத்தடிச்சேனை) – ஈச்சிலம்பற்று முகாம்)
2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்
3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் – (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்
4.கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை
5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை
6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை
7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்
8.கனகசபை கனகசுந்தரம் – பூநகர்
9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்
10.மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்
11.கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்
12.வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்
13.முத்தையா காளிராசா – பூநகர்
14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்
15.வேலுப்பிள்ளை சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
16.சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
17.வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்
20.தாமோதரம் தர்மலிங்கம் – ஈச்சிலம்பற்று
21.புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை