சுவிட்சர்லாந்து : இரு டிராம்கள் மோதியதில் நால்வர் காயம்
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தின் ஓர்லிகான் பகுதியில் இரு டிராம்கள்; மோதிக் கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சூரிச் நகர பொலிசாரின் தகவலின்படி, நண்பகல் ஒரு மணியளவில் , பாதை மார்க்கம் 11 இல் உள்ள ஒரு டிராம் ஷாஃப்ஹவுசர் வீதி வழியாக ஹாலன்ஸ்டேடியன் கண்காட்சி மையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அதேவேளை பாதை மார்க்கம் 14 இல் உள்ள ஒரு டிராம் ஷாஃப்ஹவுசர்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள நகர மையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓர்லிகான் டிராம் நிறுத்தத்திற்கு அருகில், இரண்டு டிராம்களும் மோதியதால், இரண்டு டிராம்களும் தடம் புரண்டுள்ளன. இரண்டு டிராம் ஓட்டுநர்களும் ஒரு பயணியும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு பயணிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்தின் சரியான காரணங்கள் தெரியவரவில்லை.
சூரிச் நகர பொலிசார் ஆதாரங்களை சேகரித்துள்ளதோடு , விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக புலனாய்வு பிரிவின் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.