சுவிட்சர்லாந்தில் 1986 காணாமல் போனவரின் எலும்புகள் பனிப்பறையில் மீட்பு
சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் சேர்மார்ட் மலைப் பகுதியில் உள்ள தியோடுல் பனிப்பாறையில் மனித எச்சங்களுடன் பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனித எச்சங்களை டிஎன்ஏ பகுப்பாய்விற்கு உட்படுத்திய நிலையில் 1986 முதல் காணாமல் போன ஒரு ஜெர்மன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.
செப்டம்பர் 1986இல் 38 வயதான ஜெர்மன் நாட்டவரான இவர் ஒரு மலைப் பயணத்திலிருந்து திரும்பத் தவறியதால் காணாமல் போனார். குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களும் பலனளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி மலையேறுபவர்கள் சிலர் தியோடுல் பனிப்பாறையில் மனித எச்சங்கள் மற்றும் பல பொருட்களை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மனித எச்சங்கள் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு நேரடி டிஎன்ஏ ஒப்பீட்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பரிசோதனைகளில் செப்டம்பர் 1986 முதல் காணாமல் போன நபருடைய எலும்புகள் இவை என்பதை உறுதி செய்துள்ளனர்.
பனிப்பாறைகள் அதிக வெப்பம் காரணமாக உருகிய நிலையில், பல தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் நபருடைய எலும்புகளும் அவர் பயன்படுத்திய சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
