சுவிட்சர்லாந்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது : மீறினால் 3 வருட சிறை
-ச.சந்திரபிரகாஷ்-
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் குளிர்காலத்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது எனவும் , இவற்றையும் மீறி குடியிருப்பாளர்கள் செயற்பட்டால் 3000 பிராங்குகள் வரையிலான அபராதம் அல்லது 3 வருட சிறைத் தண்டனையை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் குளிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டால், கடினமான சிலவிடயங்களை மக்கள் சந்திக்க நேரிடும் , சேமிப்புக்கான வழிமுறைகள் மத்திய அரசிடம் போதுமானதாக இல்லை என்றால் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் எரிவாயு மூலம் சூடேற்றப்படும் கட்டிடங்களில் உட்புறங்கள் அதிகபட்சமாக 19 டிகிரிக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அத்துடன் குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் நீரை 60 டிகிரிக்கு மட்டுமே சூடாக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இம்முறை குளிர்காலத்தில் கதிரியக்க ஹீட்டர்கள் அல்லது சூடான காற்று கூடாரங்கள் தடைசெய்யப்படும். சபோனாக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான அபராதத்தின் விகிதம் குறைந்தது 30 பிராங்குகள் முதல் அதிகபட்சம் 3000 பிராங்குகள் வரை எனவும் , அல்லது 3 வருடங்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை தவறுகளைப் பொறுத்து விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை கட்டுப்படுத்துவது ஒரு பெரிய சவாலாகும் என மாநிலங்களுக்கு பொறுப்பான தலைமை பொலிஸ் இயக்குனர் ஃப்ரெடி ஃபாஸ்லர் ப்ளிக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.