சுவிட்சர்லாந்தில் பனிச்சரவில் சிக்குண்டு 29 வயது நபர் உயிரிழப்பு : இருவர் காயம்
சுவிட்சர்லாந்தில் பனிச்சரவில் சிக்குண்டு 29 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக , பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேர்ன் மாநில காண்டர்ஸ்டெக்கிற்கு அருகிலுள்ள மோர்கன்ஹார்னில் சனிக்கிழமை பிற்பகல் அளவில் ஒரு பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் இதில் மூன்று பேர் புதையுண்டதாகவும் இவர்களில் இரு ஆண்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்றாவது நபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பேர் கொண்ட குழுவினர் மோர்கன்ஹார்ன் சிகரத்திற்கு பனிச்சறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, மூன்று பேர் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்ட அவசர சேவைகள் பகுதியளவு புதைக்கப்பட்ட இருவரை மீட்க முடிந்ததுள்ளது , மற்றைய நபரை இறந்த நிலையில் மீட்க முடிந்ததாகவும் உயிரிழந்தவர் , பெர்ன் மாகாணத்தைச் சோந்த 29 வயதுடைய சுவிஸ் குடிமகன் எனவும் தெரியவந்துள்ளது.
சுவிஸ் ஆல்பைன் மீட்புப் படையைச் சேர்ந்த நிபுணர்கள், மலை நிபுணர்கள் மற்றும் பெர்ன் மாநில காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு சேவைகள், இரண்டு பனிச்சரிவு தேடல் நாய்கள், மூன்று ரேகா ஹெலிகாப்டர் குழுக்கள் மற்றும் ஒரு ஏர்-கிலேசியர்ஸ் ஹெலிகாப்டர் குழு ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தன.
