சுவிட்சர்லாந்தில் திருட்டில் ஈடுபட்ட இரு ரோமானியர்கள் கைது

சுவிட்சர்லாந்தில் யூரி மாநிலத்தில் ஆல்டோர்ஃபில்(Altdorf)  பொலிசார் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு சைக்கிள் திருடர்களை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக பொலிசாருக்கு புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து இன்று, வெள்ளிக்கிழமை, அதிகாலை 4:00 மணியளவில் ஆல்டோர்ஃபில் உள்ள ஃபேப்ரிக்ஸ் (fabrik)  வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் சைக்கிள்கள் திருடப்படுவதை அவதானித்த குடியிருப்பாளர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமத் தகட்டை அடையாளம் கண்டு, யூரி மாநில காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து எர்ஸ்ட்ஃபெல்ட் நகராட்சியில் ரோமானிய உரிமத் தகடுகளுடன் மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது , திருடப்பட்டதாகக் கருதப்படும் பல சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் 51 வயதான ரோமானிய நாட்டவரான ஓட்டுநர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் , மேலதிக தேடுதலில் குறிப்பிடப்பட்ட முதல் வாகனம் டிசினோ மாநில பொலிசாரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது திருடப்பட்டதாக நம்பப்படும் மேலும் சில சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 42 வயதான ரோமானிய நாட்டவரான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான சுவிஸ் பிராங்குகள் ஆகும். குறித்த இருவரும் வேறு குற்றங்களுக்கு காரணமானவர்களா என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.