சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தொடரும் விபத்துகள்!

சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை (21 நவம்பர் 2024) பிற்பகல் 3:00 மணி முதல் கடுமையான பனி பொழிவு ஆரம்பித்துள்ளது.

நள்ளிரவுக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பனிப்பொழிவு காணப்படும் நிலையில் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாது வாகனங்களை செலுத்துவதனால் விபத்துகள் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவற்றில் பெரும்பாலான விபத்துகள் வாகனங்கள் பின்பக்கம் நகர்ந்து மற்றொரு வாகனத்தில் மோதியமை மற்றும் இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சுவிட்சர்லாந்தின் வடக்கு கிராபண்டனில் மாத்திரம் சுமார் பத்து விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று பிற்பகல் 3:00 மணி முதல் பொலிஸார் தொடர்ச்சியாக சாலை விபத்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையாக காலப்பகுதியில் 600 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்றுள்ளன.

மேலும் அவசர சேவை 144 மூலம் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலர் சிறிய காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பல கனரக வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் போக்குவரத்தை தடை செய்யும் விதமாக சாலையின் குறுக்கே விபத்துள்ளாகி காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளான வாகனங்கள் பல கோடைக்காலத்திற்கு ஏற்ற டயர்களுடன் காணப்படுவதால் குளிர்காலத்திற்குரிய வாகன பாதுகாப்பு நடவடிக்கைகளை வாகன ஓட்டுனர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

குளிர்கால உபகரணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டும் அபாயங்கள் குறித்து பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பிறருக்கு இடையூறாகவோ அல்லது ஆபத்தை ஏற்படுத்தாத வகையிலோ ஒவ்வொருவரும் போக்குவரத்தில் நடந்து கொள்ள வேண்டும். குளிர்கால உபகரணங்களின்றி வாகனங்களை செலுத்துகிறவர்களால் பல போக்குவரத்து தடைகள் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.